செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பகுதியில் பிரியாணி கடையில் வேலை செய்து வருபவர் செங்கல்பட்டு களத்துமேட்டுத்தெரு பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரது மகன் ராமு (38). இவர் கடையில் இருந்தபோது பச்சையம்மன் கோயில் பகுதியை சேர்ந்த குமார் என்பவர் மதுபோதையில் கடைக்கு வந்து சிக்கன் பக்கோடா கேட்டுள்ளார்.
சிக்கன் பக்கோடாவிற்கு குமாரிடம் பிரியாணி கடை தொழிலாளி ராமு பணம் கேட்டுள்ளார். பணம் என்னிடமில்லை. என்னை நம்ப மாட்டியா. நான் யார் தெரியுமா. என்னிடமே பணம் கேட்கிறியா நீ. சிறிது நேரத்தில் உன்னை என்ன செய்கிறேன் பார் என கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்றுவிட்டார்.
அடுத்த சிறிதுநேரத்தில் பிரியாணி கடையில் ராமு மட்டும் தனியாக இருந்தபோது குமார்மற்றும் அவரின் உடன்பிறந்த சகோதரர்கள் வினாயகம் உள்பட மூன்று பேர் ராமுவை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர். அக்கம்பக்கத்து கடைகாரர்கள் ராமுவை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சிகிச்சைக்குப்பிறகு குமார் அவரது சகோதரர் வினாயகம் உள்பட மூன்று பேர்மீது செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கடையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.