சிறந்த வார்டுகள் உருவாக்குதல் திருப்போரூரில் பணி துவக்கம்

78பார்த்தது
சிறந்த வார்டுகள் உருவாக்குதல் திருப்போரூரில் பணி துவக்கம்
திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில்,100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வாயிலாக,வீடு,கடைகள்,வர்த்தக நிறுவனங்களில் இருந்து கழிவுகள், குப்பை பெறப்பட்டு, தரம் பிரிக்கப்பட்டு உரமாக மாற்றப்படுகிறது.

இருப்பினும், பல இடங்களில் பொதுமக்கள் பலரும் குப்பையை சாலைகளிலும், தங்களது வீடுகளின் முன்பும் கொட்டி வைக்கின்றனர். இதுபோல், குப்பை கழிவுகள் அதிகமாக உருவாகும், 2 மற்றும் 14வது வார்டுகளை, துாய்மை இந்தியா- 2.0 திட்டத்தின் கீழ், சிறந்த வார்டுகளாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, பேரூராட்சி நிர்வாகம் மற்றும் தொண்டு நிறுவனம் இணைந்து, ஆறு மாத கால இடைவெளியில், சிறந்த வார்டாக உருவாக்குவதற்காக, அப்பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி துவங்கியுள்ளது. ஆட்டோ வாயிலாக பிரசாரம் செய்தல், வீடுகள்தோறும் சென்று துண்டு பிரசுரம் வழங்குதல், குப்பையை தரம் பிரித்து வழங்குதல், துாய்மை பணி மேற்கொள்ளுதல், பெண்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்துதல், மரக்கன்றுகள் நடவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதற்கான துவக்க விழா, நேற்று(செப்.14) 14வது வார்டில் நடந்தது. இதில், அப்பகுதி மக்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர். முதற்கட்டமாக, ஆட்டோ ஒலிபெருக்கி பிராசாரத்தை, பேரூராட்சி தலைவர் தேவராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி