வாகனத்தில் தொங்கியபடி பயணம் அதிகாரிகள் விழிப்பது எப்போது?

56பார்த்தது
வாகனத்தில் தொங்கியபடி பயணம் அதிகாரிகள் விழிப்பது எப்போது?
காஞ்சிபுரம் மாவட்டம் தொழில் வளர்ச்சிக்கு ஏற்றதாக உள்ளதால், 30 ஆண்டுகளில் ஏராளமான தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு, அதன் வாயிலாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இங்குள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கீழ் ஸ்ரீபெரும்புதுார், இருங்காட்டுக்கோட்டை, பிள்ளைப்பாக்கம், வல்லம், ஒரகடம் ஆகிய ஐந்து சிப்காட் தொழிற்பூங்காக்கள் இயங்கி வருகின்றன.

இதில், எலக்ட்ரானிக், ஹார்டுவேர், தொலைதொடர்பு சாதனங்கள், மோட்டார் வாகனங்கள், டயர், ரசாயனம், கண்ணாடி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

அதேபோல், தற்போது புதிய தொழிற்சாலைகள் அமைக்கும் பணிகளும் அதிகமாக நடந்து வருகிறது. கட்டுமான பணிக்காக வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கி பணிபுரிகின்றனர்.

அவ்வாறு தொழிற்சாலை கட்டுமான வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பின்றி, ஆட்டுமந்தை போல் 'ஈச்சர்' வாகனத்தில் பணிக்கு அழைத்து செல்கின்றனர்.

ஆபத்தை உணராமல் வாகனத்தின் பின்புறம் தொங்கியபடி பயணிக்கும் தொழிலாளர்கள், எதிர்பாராத விதமாக தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நடவடிககை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி