வண்டலுார் பூங்காவில், பிறந்து எட்டு நாட்களே ஆன நிலையில் நீர்யானை குட்டி திடீரென இறந்தது.
வண்டலுார் உயிரியல் பூங்காவில், ஐந்து பெண், இரண்டு ஆண் என, ஏழு நீர்யானைகள் உள்ளன. இவை, தனித்தனி கூண்டில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பிரகுர்த்தி என்று பெயரிடப்பட்ட பெண் நீர்யானை, எட்டு மாத கர்ப்பத்திற்கு பிறகு, ஆக., 21ல் குட்டி ஈன்றது.
தாயும், குட்டியும் தனி கூண்டில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தன. நீர்யானையின் குட்டியை, பூங்கா நிர்வாகம், ஆக. , 25ல் வெளியிட்டது. அதைதொடர்ந்து, அடுத்த நாள், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், வண்டலுார் உயிரியில் பூங்காவிற்கு வந்து நீர்யானை குட்டியை பார்வையிட்டு சென்றார்.
இந்த நிலையில், நேற்று (செப்.5) முன்தினம் காலை, நீர்யானை குட்டி திடீரென இறந்தது. நீர்யானை குட்டியின் உடல், பூங்கா மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அதன் அறிக்கை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. நீர்யானை குட்டியின் திடீர் இறப்புக்கான காரணம் வெளியிடப்படவில்லை. பிறந்து எட்டே நாட்களில் நீர்யானை குட்டி இறந்த சம்பவம், விலங்கு கள் நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.