காஞ்சிபுரம் மாநகராட்சி, 27வது வார்டு, நத்தப்பேட்டை கமலம் நகரில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க சாலையோரம் மின்தட பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இதில், முதல் குறுக்கு தெருவில் உள்ள ஒரு மின்கம்பத்தின் அடிப்பாகம் பலமிழந்து, கடந்த வாரம் சாய்ந்து, மின்கம்பிகளின் இணைப்பால் கீழே விழாமல் உள்ளது.
ஊசலாடும் நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என தகவல் தெரிவித்தும், மின்வாரிய அதிகாரிகள் தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என, அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால், பலத்த காற்றடித்தால் மின்கம்பம் முற்றிலும் கீழே விழுந்தாலோ அல்லது மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசினாலோ மின் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாய நிலை உள்ளது.
எனவே, மின் விபத்து ஏற்படுவதற்குள் சாய்ந்து ஊசலாடி கொண்டிருக்கும் மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நத்தப்பேட்டை கமலம் நகரினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.