கோவில் நகரமான காஞ்சிபுரத்தில்108 திவ்ய தேசங்களில் 83வது திவய் தேசமானதும், திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும், சேர சோழ பாண்டியர்களை வென்ற பல்லவன் , வில்லவன், மல்லையர்கோன் முதலிய பல அரசர்களின் திருப்பணிகளை கொண்டதும், பரமேஸ்வர விண்ணகரம் என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ வைகுந்தவல்லி சமேத ஸ்ரீ வைகுண்டப் பெருமாள் திருக்கோவில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது.
இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இத்திருக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாத பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அந்தவகையில் இந்தாண்டு வைகாசி மாத பிரம்மோற்சவமானது கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. கடந்த இரண்டு நாட்களாக காலை மற்றும் மாலை வேலைகளில் பல்வேறு வாகனங்களில் எம்பெருமான் எழுந்தருளி ராஜவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் அளித்தார்.
இன்று மூன்றாம் நாள் சிறப்பு மனோரஞ்சித மல்லி உள்ளிட்ட பல்வேறு மாலைகள் சூடி கருட வாகனத்தில் தங்க வைர ஆபரணங்களுடன் எழுந்தருளி கோபுர தரிசனம் அளித்தார். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் எம்பெருமானை வணங்கி வடம் பிடித்து வாகனத்தை காஞ்சிபுரம் ராஜ வீதிகளில் வலம் வர செய்தனர்.
விழாவினை ஒட்டி பஜனை பாடல்களும் பக்தி நடன பாடல்களும் இசைக்க கருட வாகனத்தில் வலம் வந்தார்.