செங்கல்பட்டு கொளவாய் ஏரி அருகில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கட்டடத்தில், தாலுகா காவல் நிலையம் இயங்கி வருகிறது.
இங்கு, இட நெருக்கடி மற்றும் விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தால், போலீசார் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதனால், தாலுகா காவல் நிலையத்திற்கு, புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என, தொடர்ச்சியாக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு -- பொன்விளைந்தகளத்துார் சாலையில், அரசு மருத்துவக்கல்லுாரி பகுதியில், ஒரு ஏக்கர் பரப்பளவில், ௧ கோடியே 18 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயில், 2022ம் ஆண்டு புதிய கட்டடம் கட்டி, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
காவல் நிலையத்தின் முன்பகுதியில் மட்டும் சுற்றுச்சுவர் உள்ளது. மற்ற பகுதிகளில் சுற்றுச்சுவர் இல்லாததால், கால்நடைகள் மற்றும் விஷ சந்துக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
இதனால், காவல் நிலையம் திறப்பு விழாவிற்கு முன், சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். "