மணல் குவாரியை திறக்க வலியுறுத்தி கோட்டையை நோக்கி 5, 000-லாரிகளுடன் பேரணி மற்றும் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஒருங்கிணைந்த மணல் மற்றும் சவுடு லாரி உரிமையாளர் சங்கங்கள் அறிவிப்பு
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த மணல் மற்றும் சவுடு லாரி உரிமையாளர் சங்கங்கள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அச்சங்கத்தின் தலைவர் யுவராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனை தொடர்ந்து மாநில தலைவர் யுவராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட மணல் குவாரிகளை திறக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் காலாவதியான 32-சுங்கச்சாவடிகளை அகற்ற வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் வாகன தணிக்கை என்கிற பெயரில் போக்குவரத்து காவல்துறை நடத்தும் லஞ்ச நேரத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அனைத்து மணல் லாரிகளும் இயக்காமல் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், வருகின்ற செப்டம்பர் 20-ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் இருந்து சுமார் 5, 000 மேற்பட்ட மணல் லாரிகளுடன் சென்னை கோட்டையை நோக்கி பேரணியாக செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளார்.