செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இரண்டாவது நாளாக கனமழை
மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் ஆறாக ஒடுவதால் பொதுமக்கள் அவதி
தமிழ்நாட்டில் இன்று சென்னை, செங்கல்பட்டு உள்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே விட்டு விட்டு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், காட்டாங்குளத்தூர், பொத்தேரி, சிங்கபெருமாள் கோவில், திம்மாவரம், புலிப்பாக்கம், செட்டிபுண்ணியம், திம்மராஜகுளம், பரனூர், மகேந்திராசிட்டி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
தொடர்ந்து இரண்டாவது நாளாக பெய்து வரும் கனமழையின் காரணமாக செங்கல்பட்டு - திண்டிவனம் சாலையில் கழிவு நீருடன் மழை நீர் கலந்து சாலையில் ஆறாக ஓடி வருகிறது. இதனால் சாலை ஓரமாக நடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
காலை முதலே விட்டுவிட்டு கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது.