செங்கல்பட்டு முதல் பெருங்களத்துார் வரையிலான ஜி.எஸ்.டி. சாலையில், விபத்துகளை தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், அமைக்கப்பட்டுள்ள அணுகுசாலை மற்றும் நடைபாதை யாவும், முற்றிலுமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சென்னையின் நுழைவு வாயிலாகவும், முக்கிய வழித்தடமாகவும் உள்ள ஜி.எஸ்.டி. சாலை எனப்படும் மாபெரும் தெற்கு வழித்தடம், தேசிய நெடுஞ்சாலை 45ல் ஒரு பகுதியாக உள்ளது.
சென்னை கத்திப்பாரா சந்திப்பில் துவங்கும் இந்த ஜி.எஸ்.டி. சாலை, செங்கல்பட்டு, மதுராந்தகம், திண்டிவனம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், தேனி வரை 496 கி.மீ. நீளம் உள்ளது. இதில், செங்கல்பட்டு முதல் பெருங்களத்துார் வரையிலான 28 கி.மீ. நீளமுள்ள சாலையில், தினமும் லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் பயணிக்கின்றன. இதனால், சாலை விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன.
எனவே, வாகன விபத்துகளை தவிர்க்க, பிரதான சாலையோரம் அணுகுசாலை, நடைமேடை 70 சதவீத இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணுகுசாலை மற்றும் நடைமேடை வழித்தடம் முழுதையும், சாலையோர கடைக்காரர்கள் முற்றிலுமாக ஆக்கிரமித்து, தங்களுக்கான வியாபார இடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அணுகுசாலையைப் பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகளும், நடைமேடையைப் பயன்படுத்த முடியாமல் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.