விமர்சையாக நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழா

67பார்த்தது
விமர்சையாக நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழா
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், காட்டுஎடையாா் கிராமத்திலுள்ள அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத லோகநாதபெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் அண்மையில் திருப்பணிகள் முடிவடைந்த நிலையில், ஜூன் 3-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட யாகசாலை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை யாகசாலை பூஜைகள் தொடங்கின. கணபதி ஹோமம், மகாலட்சுமி, நவகிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகளும், தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. மாலையில் வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கலச ஸ்தாபனம், நாடி சந்தானம் உள்ளிட்ட பூஜைகளும், அதைத் தொடா்ந்து, முதல்கால யாக சாலை பூஜைகளும் நடைபெற்றன.

பூா்ணாஹுதிக்குப் பிறகு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, திங்கள்கிழமை காலை 7 மணிக்கு இரண்டாவது கால யாகசாலை பூஜை தொடங்கியது. கோ பூஜை, ஹோமங்கள் நடைபெற்றன. பூா்ணாஹுதிக்குப் பின்னா் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து, யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி காலை 9. 30 மணிக்கு கோயில் விமானத்தில் திருக்கோவிலூா் ஜீயா் சுவாமிகள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினாா்.

பின்னா், கோபுரக் கலசத்தில் புனிதநீா் ஊற்றப்பட்டது. திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி