கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் பல்வேறு அரசு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பிரசாந்த் நேற்று ஆய்வு செய்தார்.
அதில் கரியாலுார் கிராமத்தில் தற்சமயம் செயல்பாட்டில் இல்லாத கடுக்காய் தொழிற்சாலை இயந்திரங்களை பார்வையிட்டு, அதனை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டிய வழிமுறைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆலோசனை செய்தார்.
மேலும் கரியாலுரில் படகு பூங்கா, சிறுவர் பூங்கா, சுற்றுச்சூழல் பார்வை கோபுரம் உள் ளிட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு தற்போது பொதுமக்கள் பயன்பாடு, தேவைப்படும் கூடுதல் வசதிகள், வருங்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கேட்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதேபோல் சேராப்பட்டு கிராமத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினரின் ஆயத்த ஆடைகள் மற்றும் நெகிழி மாற்றுப் பொருள் தயாரிப்பினை பார்வையிட்டு விற்பனை விபரம், உற்பத்தி திறன் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.