குடிநீர் தொட்டிக்குள் தவறி விழுந்த சிறுமி சாவு

4897பார்த்தது
குடிநீர் தொட்டிக்குள் தவறி விழுந்த சிறுமி சாவு
சென்னிமலை அருகே தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னிமலை அருகே சிறுக்களஞ்சி, சக்தி நகரை சேர்ந்தவர் நாகரத்தினம். இவர் திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் பிரிண்டிங் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு சிவசாரா (வயது 3) என்ற மகளும், ஆறு மாத ஆண் குழந்தையும் உள்ளனர். சனிக்கிழமை வழக்கம்போல் நாகரத்தினம் திருப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் கிருஷ்ணவேணியும், சிறுமி சிவசாராவும் இருந்துள்ளனர். சிறுமி சிவசாரா அடிக்கடி அருகில் உள்ள வீட்டுக்கு விளையாட செல்வது வழக்கம். அதேபோல் விளையாட சென்ற சிறுமி சிவசாரா வீட்டுக்கு திரும்பவில்லை. பின்னர் அக்கம் பக்கத்தில் தேடிய போது வீட்டுக்கு அருகே உள்ள சுமார் 6 அடி ஆழமுள்ள குடிநீர் தொட்டிக்குள் சிறுமி சிவசாரா மிதந்து கொண்டிருந்தது தெரிய வந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணவேணி சிவசாராவை மீட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஊத்துக்குளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே சிறுமி சிவசாரா இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னிமலை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுமி சிவசாராவின் உடலை பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி