இறந்த கால்நடைகளையும் காட்டு விலங்குகளையும் உண்ணும் வெண் முதுகுப் பாறுக் கழுகு, கருங்கழுத்துப் பாறுக் கழுகு, செம்முகப் பாறுக் கழுகு ஆகிய 3 வகை கழுகுகள் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் மாயாறு சமவெளியில் காணப்படுகின்றன.
அண்மைக்காலமாக, பாறுக் கழுகுகள் புதிய இடங்களில் தென்பட ஆரம்பித்துள்ளன. சத்தியமங்கலம் நகரத்துக்கு அருகிலேயும், புதுவடவள்ளி மற்றும் டி. என். பாளையத்திலும் அண்மையில் தென்படுவதால் கழுகுகள் எண்ணிக்கை உயர்ந்து வருவது தெரியவந்துள்ளது. எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், பாறுக் கழுகுகள் பாதுகாப்பில் வனத்துறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
வலி நிவாரண மருந்தான டைக்குளோபினாக் செலுத்தப் பட்டு இறந்தமாட்டின் உடலை உண்ணும் கழுகுகளும் மருந்து எச்சம் காரணமாக இறந்துவிடுவதால், பாறுக் கழுகுகள் பேரழிவை சந்திக்கின்றன. கழுகுகளை பாதுகாக்கவும் டைக்குளோபினாக் மருந்துகளால் கழுகுகள் உயிரிழப்பதைத் தடுப்பதற்கு மருந்துக்கடை விற்பனையாளர்களிடம் தன்னார்வ அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.