கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால், இன்று (அக். 24) அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கொடிவேரி அணை ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்கள் ஒன்றாக விளங்குகிறது. இந்த அணையில் இருந்து அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் பவானி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதியில் நேற்று இரவு விடிய விடிய கன மழை பெய்தது. இதன் காரணமாக பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கொடிவேரி அணைப்பகுதியில் பவானி ஆற்றில் வினாடிக்கு 860 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
இந்த தண்ணீர் அணையில் இருக்கும் பாதுகாப்பு கம்பிகளை தாண்டி விழுகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி, இன்று (24ம் தேதி) வியாழக்கிழமை கொடிவேரி அணையை மூடி சுற்றுலா பயணிகள் வர பொதுப்பணித்துறையினர் தடை விதித்துள்ளனர்.