ஈரோடு நாடார்மேடு காளியப்பகவுண்டர் வீதியை சேர்ந்தவர் யுவராஜா (வயது 33). கால்டாக்சி வைத்து ஓட்டி வருகிறார். இவர் தனது காரை நாடார் மேட்டில் இருந்து ஈரோடு ரெயில் நிலையம் நோக்கி ஓட்டி சென்றார். அந்த கார் வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டரின் மீது மோதியதுடன் சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த நறுமண திரவியங்கள் (சென்ட்) விற்பனை செய்யும் கடையையும் சேதப்படுத்திவிட்டு, சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்னால் மோதியது. இதில் காரின் முன் பகுதி நொறுங்கியது. ஆனால் காரை ஓட்டி வந்த யுவராஜா அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.
கார் மோதியதில் சுமார் ரூ. 1 லட்சம் மதிப்பிலான நறுமண திரவியங்கள் சாலையில் கொட்டி வீணாகியது. விபத்து ஏற்பட்டதும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்த தகவல் கிடைத்ததும் ஈரோடு சூரம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
டிரைவர் யுவராஜா குடிபோதையில் காரை ஓட்டி வந்ததை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.