ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின்(பேட்டியா) செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு அக்கூட்டமைப்பின் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். பொதுசெயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் பிரகாஷ் பங்கேற்று, அரசின் மக்களை தேடி மருத்துவம் திட்டம் குறித்தும் விளக்கி பேசினார்.
இந்த கூட்டத்தில், கூட்டமைப்பின் கவுரவ உறுப்பினரான திமுக இளைஞர் அணி மாநில துணை செயலாளர் கே.இ. பிரகாஷ் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றதற்கும், அவரது பணி சிறக்க வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. மேலும், மத்திய அரசில் அமைய இருக்கும் புதிய அமைச்சரவைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈரோடு போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் மற்றும் மேம்படுத்தவும் சத்தியமங்கலம், கோவை போன்ற நகரங்களில் இருந்து வரும் கனரக வாகனங்களை பெருந்துறை அருகே எல்லீஸ்பேட்டை மூலக்கரையிலிருந்து பூந்துறை சாலை, எழுமாத்தூர் சாலை, பாசூர் சாலை இணைத்து புதிய நான்கு வழிச்சாலை அமைக்க பேட்டியா விடுத்த கோரிக்கையை நிறைவேற்றி, சாலையை அளவிடும் பணிகளை துவங்க அனுமதி அளித்த தமிழக முதல்வருக்கும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.