முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பங்கேற்க, ஈரோடு மாவட்டத்தில், 21,690 பேர் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி வரும், 10ம் தேதி தொடங்குகிறது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என ஐந்து பிரிவுகளாக போட்டி நடக்கவுள்ளது.
இப்போட்டியில் பங்கேற்பதற்கான முன்பதிவு கடந்த ஆக. , 17ம் தேதி தொடங்கியது. 25ம் தேதியுடன் முன்பதிவு அவகாசம் முடிந்த நிலையில், https: //sdat. tn. gov. in என்ற இணைய தளத்தில் பதிவு செய்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது. இதனால் செப். 2 வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், போட்டிகளில் பங்கேற்க ஈரோடு மாவட்டத்தில், 21,690 பேர் பதிவு செய்துள்ளனர். முதல்வர் கோப்பை போட்டியில், மாநில அளவில் தனிநபர் பிரிவில் முதலிடம் பெறுவோருக்கு ஒரு லட்சம், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் பெறுவோருக்கு முறையே, 75 ஆயிரம் மற்றும், 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.