எரியோடு கோவிலுார் இடையே தோப்புப்பட்டியில் திண்டுக்கல் குஜிலியம்பாறை வழி கரூர் நெடுஞ்சாலை இடத்தில் 13 கடைகள் ஆக்கிரமிப்பாக அமைக்கப்பட்டிருந்தன. நீண்ட ஆண்டுகளாக போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த நிலையில் ஆக்கிரமிப்பின் பின்பகுதியில் இருக்கும் நில உரிமையாளரான பெருமாள்சாமி மதுரை உயர்நீதி மன்ற கிளையில் தொடர்ந்த வழக்கில், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு வழங்கப்பட்டது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் 20 நாட்களுக்கு முன்னர் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. வேடசந்துார் உதவி கோட்ட பொறியாளர் ஆனந்த், உதவி பொறியாளர் தினேஷ்பாபு முன்னிலையில் இயந்திரங்கள் கொண்டு ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றப்பட்டன. குஜிலியம்பாறை தாசில்தார் தமிழ்ச்செல்வி, எரியோடு இன்ஸ்பெக்டர் முருகன், நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர்கள் குமார், அருணாச்சலம், கார்த்திகேயன், முருகன் மற்றும் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.