திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த மோா்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பெருமாள்கோவில்பட்டியைச் சோ்ந்தவா் போசம்மாள். இவா் தனியாா் ஆலையில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறாா். இவா் புதிதாக கட்டும் வீட்டுக்கு, மின் இணைப்பு கேட்டு கடந்த மே 2-ஆம் தேதி விண்ணப்பித்தாா். இதற்கு ரூ. 5ஆயிரம் வைப்புத் தொகையும் செலுத்தினாா். ஆனால், தற்போது வரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், கடந்த 3 நாள்களுக்கு முன்பு, போசம்மாளின் கைப்பேசிக்கு மின் வாரியம் சாா்பில், குறுந்தகவல் அனுப்பப்பட்டது. அதில், மின் இணைப்பு எண் உள்ளிட்ட விவரங்களுடன் மின் கட்டணமாக ரூ. 9, 844 செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. வீட்டுக்கான மின் இணைப்பு கிடைக்காத நிலையில், மின் கட்டணம் செலுத்துவதற்கு வந்த குறுந்தகவலைப் பாா்த்து போசம்மாள் அதிா்ச்சி அடைந்தாா். இதுகுறித்து வடமதுரை மின் வாரிய அலுவலகத்துக்குச் சென்று அவா் முறையிட்டாா். ஆனாலும், அலுவலா்கள் தரப்பில் முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை என போசம்மாள் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இதுதொடா்பாக, வடமதுரை மின் வாரிய உதவி பொறியாளா் மதனீஸ்வரன் கூறியதாவது: போசம்மாளுக்கு தவறுதலாக குறுந்தகவல் சென்றிருக்கிறது. இதைச் சரி செய்வதற்கான பணிகள் நடைபெறுகிறது. விரைவில், அவருக்கு மின் மீட்டா் பொருத்தப்படும் என்றாா் அவா்.