பழனி திருநகர் பகுதியில் உள்ள தனியார் கட்டிடத்தில் ஆந்தை ஒன்று புகுந்தது. வெள்ளை நிறத்திலான அந்த ஆந்தை, பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாக இருந்தது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக பழனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் பழனி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் தனியார் கட்டிடத்தில் இருந்த ஆந்தையை லாவகமாக பிடித்தனர். தொடர்ந்து அந்த ஆந்தை, பழனி வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து அந்த ஆந்தையை வனத்துறையினர், கொடைக்கானல் சாலையில் உள்ள வனப்பகுதியில் கொண்டு விட்டனர். இதுபற்றி வனத்துறையினர் கூறும்போது, பிடிபட்ட ஆந்தை நமது நாட்டில் உள்ள ஒரு வகையைச் சேர்ந்தது தான்.
ஆனால் மற்ற ஆந்தைகளைப் போல் இல்லாமல், சற்று வெண்மை நிறம் கலந்து இருக்கும். இந்த வகை ஆந்தைகள், வனப்பகுதியில் உள்ள பெரிய மரங்களில் இருக்கும் என்றனர்.