பழனியில் நூதன முறையில் மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபர்

60பார்த்தது
பழனி ஆர். எப். ரோடு பகுதியில் மோட்டார் சைக்கிள் பழுது நீக்கும் கடை உள்ளது. 3 வாலிபர்கள் மோட் டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு அங்கு வந்தனர். பின்னர் மோட்டார் சைக்கிள் பழுதாகி விட்டதாகவும், அதனை சரிசெய்து தருமாறும் கூறினர். இதனையடுத்து கடை உரிமையாளர், அவர்களின் மோட்டார் சைக்கிளில் பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது 2 பேர், தாங்கள் டீ குடித்துவிட்டு வருவதாக கூறி சென்றனர். சிறிது நேரம் கழித்து மற்றொரு வாலிபர் தானும் டீ குடித்துவிட்டு வருவதாக கூறி ஒர்க்ஷாப் உரிமையாளரின் மோட்டார் சைக்கிளை வாங்கி சென்றதாக தெரிகிறது. அதன்பிறகு டீ குடிக்க சென்ற 2 பேரும் திரும்பி வந்தனர். ஆனால் மோட்டார் சைக்கிளுடன் சென்ற வாலிபர் வெகுநேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கடை உரிமையாளர், அந்த 2 வாலிபர்களிடம் விசாரித்தார்.
அப்போது, தாங்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் என்றும், பழனிக்கு வந்தபோது மோட்டார் சைக்கிள் பழுதானதால் அந்த வாலிபரிடம் பழுது பார்க்கும் கடைக்கு வழி கேட்டோம். அந்த வாலிபர், தங்களை இங்கு அழைத்து வந்ததாக கூறினர். இதனைக்கண்டு கடை உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். நூதனமுறையில் தன்னிடம் மோட்டார் சைக்கிளை வாலிபர் திருடி சென்றது அவருக்கு தெரியவந்தது. இதுகுறித்து அவர், பழனி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி