பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ. வ. வேலு மற்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் ரூ. 5. 39 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வெளிநோயாளிகள் பிரிவு கட்டட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அரசு கூடுதல் தலைமைச் செயலர் மங்கத்ராம் சர்மா, அரசு செயலர்(நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை) செல்வராஜ், மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி, பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், மதுரை(வடக்கு) சட்டமன்ற உறுப்பினர் தளபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் வெளிநோயாளிகள் பிரிவு கட்டடம் ரூ. 5. 39 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடத்தில் வெளிநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அறை, அறுவை சிகிச்சை அரங்கம், ஆய்வகம், மருத்துவர் ஆலோசனை அறைகள், சிடி ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே அறைகள், பொருட்கள் இருப்பு அறை, பொதுக்கழிவறைகள் உட்பட வசதிகளுடன் கட்டப்பட்டு வருகின்றன.
பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என தெரிவித்தார்.