திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வெப்பம் சார்ந்த நோய்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்பாக துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியதலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.
கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வெயில் காலங்களில், தோலில் சிறுசிறு கொப்பளங்கள், வீக்கம், வெப்ப பிடிப்புகள், சூடான மற்றும் வறண்ட தோல் தடிமன், சோர்வடைதல், வெப்ப பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும். இந்த நோயின் அறிகுறிகளாக வறண்ட தோல் நோய், அதிகமான தாகம், வாந்தி, தலைவலி, பலவீனம், உடற்சோர்வு, சிறுநீர் அளவு குறைதல், சிறுநீர் மஞ்சள் நிறத்தில் எரிச்சலுடன் (கடுத்து) போதல், அதிக அல்லது இல்லாத வியர்வை, தசைப்பிடிப்பு, லேசான தலைசுற்றல், வலிப்பு போன்றவை வெளிப்படும் என மாவட்ட ஆட்சியதலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் சதீஸ்பாபு, இணை இயக்குநர் (சுகாதார நலப்பணிகள்) பூமிநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோட்டைக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) முருகன் மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.