தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில், தமிழ்நாடு முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதியத்தை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிகளை வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க, ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அரசு பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 500க்கும் மேற்பட்டோர் தமிழக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.