சேலத்தை சேர்ந்த ரவுடி ஜான் என்கிற சாணக்கியன் ஈரோட்டில் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது மனைவி ஆதிரா உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜான் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவர் பிரபல ரவுடியாக வலம் வந்து உள்ளார். இந்நிலையில் சேலத்தில் இருந்து ஜான் மற்றும் அவரது மனைவி ஆதிரா திருப்பூர் செல்வதற்காக காரில் புறப்பட்டு சென்றனர்.
ஈரோடு மாவட்டம் நசியனூர் கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாமி கவுண்டம்பாளையம் பிரிவில் கார் சென்று கொண்டு இருந்தது. அவர்களது காரை பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் ஜான் சென்ற காரை வழி மறித்து நிறுத்தியது.
கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம கும்பல் ஜானை சரமாரியாக வெட்டினர். இதை தடுக்க சென்ற அவரது மனைவி ஆதிராவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ஜான் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். கொலை செய்து விட்டு சேலம் நோக்கி செல்லும் போது சித்தோடு அருகே உள்ள பச்சப்பாளி என்ற இடத்தில் காவல் துறையினர் 4 பேரை காலில் சுட்டுப் பிடித்தனர். அவர்கள் நாலு பேரும் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினரும் தொடர்ந்து இதுகுறித்து கோவையில் மருத்துவமனையில் உள்ள அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.