மயிலாடுதுறையைச் சேர்ந்த அய்யப்பன் (வயது 48), பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 4.7.2018 அன்று சிங்காநல்லூர் நீலிக்கோணாம்பாளையம் ரயில் தண்டவாளம் வழியாக நடந்து சென்றார். அப்போது, அவரை வழிமறித்த இருவர் மது அருந்த பணம் கேட்டு மிரட்டினர். பணம் தர மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இருவரும் அய்யப்பனை சரமாரியாகத் தாக்கி கத்தியால் குத்தினர். இதில் பலத்த காயமடைந்த அய்யப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அந்த இருவரும் அய்யப்பனின் மணிப்பையில் இருந்த ரூ.350-ஐ எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, வழிப்பறிக் கொள்ளையர்களான மோகன்குமார் (22) மற்றும் அரவிந்தன் (21) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி சசிரேகா குற்றம்சாட்டப்பட்ட மோகன்குமார், அரவிந்தன் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.