வக்பு வாரியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும், வகுப்பு வாரிய சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழக வெற்றிக் கழகத்தினர் நேற்று முன்தினம் கோவை புறநகர் சூலூரில் அடையாள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சூலூர் அண்ணா சீரணி கலையரங்கம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர் பாபு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கழகத்தினர், "வகுப்பு வாரிய சட்டத்தை நிராகரிப்போம்", "வகுப்பு வாரிய சட்டத்தை திரும்ப பெற வேண்டும்", "வகுப்பு வாரிய சட்டம் சிறுபான்மை மக்களுக்கு எதிரானது" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர். மேலும், மத்திய அரசைக் கண்டித்து கோஷங்களையும் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட செயலாளர் பாபு, சிறுபான்மை மக்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட இந்த சட்டம் மக்களை பாதிக்கும் வகையில் உள்ளது. சிறுபான்மை மக்கள் அல்லாத நபரை வகுப்பு வாரியத்திற்கு தலைவராக நியமித்திருப்பது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு உடனடியாக இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த அடையாள ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தினர் கலந்து கொண்டனர்.