கோவை மாவட்டத்தில் சூலூர் காவல்துறை சார்பில் மகளிர் மாரத்தான் போட்டி நடைபெற்றது. அவிநாசி சாலையில் உள்ள டெக்கத் தலானில் தொடங்கிய இந்த 10 கி. மீ. மாரத்தான் போட்டியை கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் நேற்று துவக்கி வைத்தார். இதில் கல்லூரி மாணவிகள், பெண் காவல் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவிக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில் பேசிய எஸ்பி கார்த்திகேயன், காவலர் செயலியை அனைத்து மகளிரும் பயன்படுத்த வேண்டும் என்றும், இதன் மூலம் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்றும் தெரிவித்தார். மேலும், காவலர் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்பி கார்த்திகேயன், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிரும் காவலர் செயலியை பயன்படுத்த வேண்டும் என்பது காவல்துறையின் அன்பான வேண்டுகோள். இந்த செயலியின் மூலம் குற்றங்கள் பெருமளவில் தடுக்கப்படும் என்றார்.