கோவை சோமனூர் ரயில் நிலையத்தில் விவசாய சங்கங்கள் சார்பில் நேற்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் டெல்லி சலோ 2. 0 போராட்டத்தின் தொடர்ச்சியாக நடத்தப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய டெல்லி சலோ 2. 0 போராட்டத்தில், அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், பஞ்சாப்-அரியானா எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டனர். சமீபத்தில், பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி குர்மீத் சிங் போராட்ட களத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து, நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்தன. இதன் ஒரு பகுதியாக, கோவை சோமனூர் ரயில் நிலையத்தில் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். போலீசார் தடுப்புகள் அமைத்து விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து, விவசாயிகள் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.