கோவையில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக, கோவை வடகோவை மேம்பால சுரங்கப்பாதையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் சமச்சீராக வாகனத்தை ஓட்ட முடியாமல் தடுமாறும் நிலை ஏற்பட்டது. இது குறித்து பேசிய வாகன ஓட்டிகள், கோவை மாநகராட்சி நிர்வாகம் மழைநீரை உடனடியாக அகற்றாததால், நாங்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகிறோம். வடகோவை மேம்பால சுரங்கப்பாதை கோவையின் முக்கிய சாலைகளை இணைக்கும் முக்கிய இணைப்பாக இருப்பதால், மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மழைநீரை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
மேலும், மழைநீருடன் கழிவுநீர் கலந்துள்ளதால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.