கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் கோவை மாநகர மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் நேற்று நள்ளிரவு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். சந்தேகத்திற்கு இடமாக வரும் பயணிகளை பிடித்து அவர்களது உடமைகளை சோதனை செய்தனர். தொடர்ந்து போலீசார் பிளாட்பாரத்தில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது 1வது பிளாட்பாரத்தில் மூட்டை ஒன்று கேட்பாரற்று கிடந்ததை போலீசார் பார்த்தனர். உடனே போலீசார் அந்த மூட்டையை சோதனை செய்தனர். அதில் 8 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசாரின் சோதனையை பார்த்து கஞ்சாவை கடத்தி வந்த நபர் அதனை அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கஞ்சாவை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் கஞ்சாவை விட்டுவிட்டு தப்பி சென்ற மர்ம நபர் யார் என சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் நிலையத்தில் கஞ்சா மூட்டை பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.