
கோவை: தாய், 2 குழந்தைகள் கொலை வழக்கு; தங்கத்தாலி ஒப்படைப்பு
பொள்ளாச்சி அருகே 1987-ம் ஆண்டு குடும்பத்தகராறில் மனைவி அருக்காணி மற்றும் இரட்டை குழந்தைகளை கொலை செய்து தலைமறைவான முத்துச்சாமியை போலீசார் தேடி வந்தனர். இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட அருக்காணியின் ஒரு பவுன் தங்கத்தாலி மற்றும் 10 ரூபாய் நோட்டு பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தது. முத்துச்சாமி கைது செய்யப்படாத நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி, 38 ஆண்டுகளுக்குப் பின் கொலை செய்யப்பட்ட அருக்காணியின் அக்காளான வெள்ளாளபாளையத்தைச் சேர்ந்த முத்தம்மாளிடம் (வயது 82) அந்த தங்கத்தாலியும், 10 ரூபாய் நோட்டும் நேற்று நீதிமன்றத்தில் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பின் தனது தங்கையின் நகையையும், பணத்தையும் பெற்றுக் கொண்ட முத்தம்மாள் நெகிழ்ச்சியுடன் காணப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.