கோவை மாநகரம் தற்போது போஸ்டர் யுத்தத்தால் பரபரப்பாக காணப்படுகிறது. அதிமுக மற்றும் திமுக தொண்டர்கள் மாறி மாறி தங்களது அரசியல் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தும் விதமாக போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.
அதிமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டர்களில், அண்ணா, எம். ஜி. ஆர். , ஜெயலலிதா ஆகியோரின் படங்களுடன், தற்போதைய இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி, அம்மன் அர்ஜுனன் மற்றும் ஜெயராமன் ஆகியோரின் படங்களும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, எடப்பாடி பழனிச்சாமியின் படம் முன்னிலைப்படுத்தப்பட்டு, 2026 இல் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் அ. தி. மு. க ஆட்சி. கூட்டி கழிச்சு பாரு கணக்கு சரியா வரும் என்ற ரஜினிகாந்த் பட வசனம் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர்கள் அதிமுக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். கோவை நகரின் பல்வேறு முக்கிய இடங்களிலும் இந்த போஸ்டர்கள் காணப்படுகின்றன.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, திமுகவினரும் நீட் தேர்வுக்கு எதிரான தங்களது தொடர் போராட்டத்தை வலியுறுத்தி போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் எந்த வகையிலும் முடிவடையவில்லை. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் கோவை நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.