பொள்ளாச்சி அருகே பொன்னாயூர் பகுதியில் நேற்று இரண்டு லாரிகள் மோதிக்கொண்டதில் ஓட்டுநர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சாலையில் போக்குவரத்து தடைபட்டது. அப்போது அந்த வழியாக வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகள் மீது அடுத்தடுத்து மோதியதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். கேரள மாநிலம் கோபாலபுரத்தில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த லாரி ஒன்றையும், திருப்பூரை சேர்ந்த மற்றொரு லாரியும் முந்த முயன்றபோது மோதிக்கொண்டன. இதனால் இரண்டு லாரி ஓட்டுநர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில், கேரளாவில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும், பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகள் மீது மோதியதில் முகமது அஸ்லாம் (22), அப்ஷல் (22), ரியாசர் (22), ஷியால் (17), கார்த்தி (33), சல்மான் (19), ரூபன் (18), அங்குராஜ் (17) ஆகிய 8 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னர் கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.