கோவை அரசு மருத்துவமனை அருகே பாதாள சாக்கடை அடைப்பு மற்றும் குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக, சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், மருத்துவமனை அருகிலேயே கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் மூன்று பள்ளிகள் இயங்கி வருவதால், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் பதினொன்றாம் வகுப்பு சிறப்பு வகுப்புகளுக்கு வரும் மாணவர்களும் மூக்கைப் பிடித்துக்கொண்டு கழிவுநீரை கடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்துகள் நிகழும் சூழல் உருவாகியுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதுடன், நோய்த்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகரம் இணைக்கப்பட்டிருந்தாலும், மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் முக்கிய சாலைகள் மற்றும் வீதிகளில் கழிவுநீர் மற்றும் குப்பைகள் நிறைந்து துர்நாற்றம் வீசுகிறது. எனவே, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பிரச்சினையை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.