ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரகம், கோட்டூர் பிரிவு பருத்தியூர் உமாண்டி மலை சராகப் பகுதியில் களப்பணியாளர்கள் அன்றாட ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இரண்டு பெண் காட்டு யானைகள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டன. விசாரணையில், காட்டு யானைகள் மேட்டுப்பகுதியில் இருந்த தாழ்வான நிலத்தடி பகுதியை கடந்து வரும் வழியில் மின்சார கம்பி தாக்கி இறந்திருப்பது கண்டறியப்பட்டது. இச்சம்பவம் குறித்து வனச்சரக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் பார்க்கவே தேஜா மற்றும் பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் ஞானபாலமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேற்று ஆய்வு மேற்கொண்டனர். யானைகளுக்கு உடற்கூறாய்வு மேற்கொள்ள டாக்டர் விஜயராகவன் தலைமையிலான மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். எனினும், இரவு நேரமாகிவிட்டதால், மறுநாள் காலை மருத்துவர்கள் குழுவினர் யானைகளுக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையினர் மேலும் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.