கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக், நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, பாஜக அரசு 100 நாள் வேலை திட்டத்திற்கு தர வேண்டிய நிதியை தராமல் இழுத்தடிப்பதை கண்டித்து திமுக சார்பில் அனைத்து ஒன்றியங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த நிதி உடனடியாக வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறு சீரமைப்பு என்பது மாநில உரிமைகளை பறிப்பதற்கும் மாநிலத்தின் நலன்களை பறிப்பதற்கும் பாஜக அரசு தரும் தாக்குதல் என்று கூறினார். இந்த விவகாரத்தில் அனைத்து மாநிலங்களையும் தமிழக முதல்வர் ஒருங்கிணைத்து நடத்திய கூட்டத்தில் குறிப்பாக நாடாளுமன்றத்தில் தற்பொழுது என்ன நிலைமை உள்ளதோ அதுவே தொடர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
1971 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி பார்த்தால் தமிழ்நாடு, ஒடிசா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மக்கள் தொகை 23. 41%, வடமாநிலங்களில் உத்திர பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 24. 39% மக்கள் தொகை இருந்ததாகவும், தேசிய அளவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்துகின்ற திட்டங்களை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் சிறப்பாக செயல்படுத்தியது எனவும் வட மாநிலங்கள் அதனை செயல்படுத்தவில்லை எனவும் விமர்சித்தார்.