கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை பகுதியைச் சேர்ந்த ராம் என்பவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பள்ளி விடுமுறையை முன்னிட்டு சிறுமுகை அருகே உள்ள வச்சினம்பாளையம் பகுதியில் உள்ள பவானி ஆற்றில் இன்று குளிக்கவும், துணி துவைக்கவும் சென்றனர். அங்கு அவர்கள் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டும், துணி துவைத்துக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருந்தனர். அப்போது திடீரென பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் அனைவரும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். வெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தினர் என்ன செய்வதென்று தெரியாமல் உதவி கேட்டு கத்தி கூச்சலிட்டனர். இதைக் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து பார்த்தனர். உடனடியாக சுதாரித்துக் கொண்டு, அருகில் இருந்த தோட்டங்களில் இருந்து கயிறுகளை எடுத்து வந்து, அவற்றைக் கொண்டு வெள்ளத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட 5 பேரிடமும் அறிவுரை கூறிய பொதுமக்கள், இந்த இடத்தில் குளிக்கக் கூடாது என்று பேரூராட்சி நிர்வாகம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது என்றும், அதை மீறி குளித்ததால் தான் இந்த அபாயம் ஏற்பட்டது என்றும் தெரிவித்தனர். ஆற்றில் எப்போது வேண்டுமானாலும் வெள்ளம் ஏற்படலाம் என்பதால் தான் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.