கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு செல்வதற்காக கோத்தகிரி மற்றும் குன்னூர் ஆகிய இரண்டு வனச்சாலைகள் உள்ளன. இந்த வனச்சாலைகளில் வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கக்கூடிய நிலையில், தற்போது லேசான வறட்சி ஏற்பட்டிருக்க கூடிய நிலையில் வன உயிரினங்கள் வனத்தின் சாலை ஓரங்களில் இருக்கக்கூடிய பொருட்களை மேய வெளியே நடமாடி வருகிறது. மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் மரப்பாலம் என்ற இடத்தில் நேற்று ஒற்றை காட்டு யானை சாலை ஓரத்தில் இருந்த பொருட்களை மேய்ந்து கொண்டு நடமாடிக் கொண்டிருந்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வாகனங்களை அந்தந்த பகுதிகளிலேயே நிறுத்திக் கொண்டனர். சாலையோரத்தில் நின்று கொண்டிருக்க கூடிய யானை திடீரென தங்களை தாக்கி விடுமோ என்ற அச்சத்தில் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. சுமார் அரை மணி நேரம் அங்கேயே உலாவிய அந்த காட்டு யானை பின்னர் அடர் பகுதிக்குள் சென்று மறைந்தது. இதனால் மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் சற்று நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்ததுடன் வாகன ஓட்டிகளும் அச்சமடைந்தனர். இனிவரும் காலங்களில் வன உயிரினங்களின் நடமாட்டம் சாலை ஓரங்களில் இருக்க வாய்ப்புள்ளதால், வாகன ஓட்டிகள் மிதவேகத்தில் சென்று எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்குமாறு வனத்துறை அறிவுறுத்தியுள்ளனர்.