கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள தண்ணீர் தடம் பகுதியில் கடந்த 10 ஆம் தேதி இரவு நான்கு இளைஞர்கள் மளிகை கடை ஒன்றின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பணம் மற்றும் சிகரெட் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். காரமடை-கோவை பிரதான சாலையில் அமைந்துள்ள இந்த மளிகை கடையில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. பயமின்றி நான்கு இளைஞர்கள் ஒன்றன்பின் ஒன்றாக உள்ளே நுழைந்து கொள்ளையடித்து வெளியேறிய காட்சிகள் பதிவாகியிருந்தன. இச்சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் இடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த சாமுவேல், சங்கனூர் தினேஷ் கார்த்திக், அப்ரித்கான் மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது ஏற்கனவே கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திருட்டு வழக்குகள் மற்றும் இதர வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இன்று சிறையில் அடைத்துள்ளனர்.