நிலுவை தொகையை செலுத்த வேண்டும்; ஆட்சியர் எச்சரிக்கை

51பார்த்தது
நிலுவை தொகையை செலுத்த வேண்டும்; ஆட்சியர் எச்சரிக்கை
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் வீடு மற்றும் மனை ஒதுக்கீடு பெற்றவர்கள் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் கணக்கை நேர் செய்யாவிட்டால் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று எச்சரித்துள்ளார்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் கோவை வீட்டுவசதி பிரிவுக்குள்பட்ட கணபதி, வெள்ளக்கிணறு, பெரியநாயக்கன்பாளையம், வீரகேரளம், காளப்பட்டி, முதலிபாளையம் பகுதிகளில் வீடு மற்றும் மனை ஒதுக்கீடு பெற்ற 1, 777 பேர் வாரிய விதிமுறைகளின்படி பணம் செலுத்தும் காலம் முடிவடைந்தும் பணம் செலுத்தாமல் உள்ளனர்.

அரசு சார்பில் வட்டி தள்ளுபடி சலுகை பலமுறை அளித்தும் இந்த ஒதுக்கீட்டாளர்கள் நிலுவைத் தொகையை செலுத்த முன்வரவில்லை என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். எனவே, ஒதுக்கீட்டுதாரர்கள் உடனடியாக தங்களிடம் உள்ள அசல் விண்ணப்பம், ஒதுக்கீட்டு ஆணை, அசல் ரசீதுகள் போன்ற ஆவணங்களுடன் வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் கோவை வீட்டுவசதி பிரிவு அலுவலகத்தைத் தொடர்புகொண்டு, நிலுவைத் தொகையை செலுத்தி கிரைய பத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், நிலுவைத் தொகையை செலுத்தாதவர்களின் ஒதுக்கீடு உத்தரவு எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் ரத்து செய்யப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி