கோவை மாநகரில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து உயர் ரக போதை பொருளான மெத்தபேட்டமைனை விற்பனை செய்து வந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். காந்திபுரம் பேருந்து நிலையம் பகுதியில் போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை மற்றும் மதுவிலக்கு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் இவர்கள் சிக்கினர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் புலியகுளத்தைச் சேர்ந்த கோபிநாத் மற்றும் கேரளாவைச் சேர்ந்த மதிலாஜ், விக்னேஷ், அஜித் ஆவர். இவர்கள் பெங்களூரில் இருந்து மொத்தமாக மெத்தபேட்டமைனை வாங்கி வந்து கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூபாய் ஆறு லட்சம் மதிப்பிலான 195 கிராம் மெத்தபேட்டமைன், போதைப்பொருள் பயன்படுத்தும் உபகரணங்கள், ரூபாய் 15, 000 மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் மீது ஏற்கனவே விசாகப்பட்டினம் மற்றும் கோவையில் கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு நேற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.