கோவை ஆர். எஸ். புரத்தில் அமைந்துள்ள பூ மார்க்கெட்டில் பூக்களின் வரத்து குறைந்ததால், இன்று விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. காரமடை, அன்னூர், சத்தியமங்கலம், திண்டுக்கல், நிலக்கோட்டை, ஓசூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பூக்களின் வரத்து கடும் வெயில் காரணமாக குறைந்துள்ளது.
இதனால், மல்லிகைப்பூ கிலோ ரூ. 600-ல் இருந்து ரூ. 800 ஆகவும், ஜாதி மல்லி ரூ. 500-ல் இருந்து ரூ. 1, 000 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. மற்ற பூக்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. பட்டன் ரோஜா ரூ. 320, பச்சை முல்லை ரூ. 1, 000, செவ்வந்தி ரூ. 320, சம்பங்கி ரூ. 140, துளசி ரூ. 30-40, கனகாம்பரம் ரூ. 480, தாமரைப்பூ ஒன்று ரூ. 15 என விற்பனையானது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், பங்குனி மாதத்தில் கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறுவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. அதேநேரம், கடும் வெயில் காரணமாக பூக்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வெளியூர் பூக்களை நம்பி இருப்பதால் வரத்து குறைவாக உள்ளது. மல்லிகைப்பூ வரத்து சற்று அதிகரித்ததால் விலை ரூ. 800 ஆக குறைந்தது. பங்குனி உத்திரம், தமிழ்ப்புத்தாண்டு போன்ற பண்டிகைகள் நெருங்குவதால் பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என்று தெரிவித்தனர்.
பூ மார்க்கெட்டில் எப்போதும் அதிக கூட்டம் இருக்கும். தற்போது பூக்களின் விலை உயர்வால் சிறிய வியாபாரிகளும் பொதுமக்களும் கவலை அடைந்துள்ளனர்.