கோவை, தொண்டாமுத்தூர் அருகே முத்திபாளையம் பகுதியில் வசித்து வரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த வாய் பேச முடியாத 14 வயது சிறுமி நேற்று முன்தினம் மாலை தொண்டாமுத்தூர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் சிறுமியை அருகில் உள்ள சித்திரைச்சாவடி வாய்க்கால் அருகே அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அச்சிறுமி தொண்டாமுத்தூர் சாலையில் இறக்கி விடப்பட்டார். இதனால், அப்பகுதியில் அழுதுகொண்டு இருந்த சிறுமியை முதியவர் ஒருவர் பார்த்து அழைத்துச் சென்று போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் சிறுமியின் பெற்றோரை அழைத்து வந்து விசாரித்ததில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது தெரியவந்தது. உடனடியாக, பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வழக்கு ஒப்படைக்கப்பட்டு, தனிப்படை அமைத்து தற்போது தீவிர விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சந்தேகத்தின் பெயரில் 6 பேரை பிடித்து தொண்டாமுத்தூர் பகுதியில் வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.