கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணை தெருநாய் கடித்ததால் ரேபிஸ் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி, சில நாட்களுக்கு முன் உயிரிழந்திருக்கிறார். இதேபோல், கோவை நகர்ப்பகுதியில் மட்டும் தெருநாய்க்கடியால் பாதிக்கப்பட்டு, இதுநாள் வரை ஆறு பேர் உயிரிழந்திருக்கின்றனர். இச்சூழலில், தெருநாய்கள் கடித்து சிகிச்சைக்கு வருவோர் பட்டியலை பார்த்தால் மிரள வைக்கிறது.
கடந்த ஒன்பது மாதங்களில், கோவை அரசு மருத்துவமனையில் மட்டும் 15 ஆயிரத்து 124 பேர் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்றிருக்கின்றனர். சிகிச்சை பலனின்றி 4 பேர், இதன் பின் இருவர் என, மொத்தம் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு பொது மருத்துவமனைகளில் 9881 பேர் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். இதன்படி, ஒன்பது மாதங்களில் கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டும், 25 ஆயிரத்து, 5 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்கள் எத்தனை பேர் என்பது இக்கணக்கில் சேராது என்பதும் குறிப்பிடத்தக்கது.