சென்னை: கால்பந்து மைதான விவகாரம்.. தீர்மானம் வாபஸ்
சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயா் ஆா். பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நேற்று(அக்.29) நடைபெற்றது. துணை மேயா் மு. மகேஷ்குமாா், ஆணையா் ஜெ. குமரகுருபரன் முன்னிலை வகித்தனா். இந்த கூட்டத்தில் மொத்தம் 79 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் மிக முக்கியமான தீர்மானமாக “சென்னையில் அமைந்துள்ள 9 கால்பந்து திடல்களைத் தனியாரிடம் ஒப்படைக்கும்” தீர்மானம் இருந்தது. சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் மொத்தம் 738 பூங்காக்கள், 173 உடற்பயிற்சி கூடங்கள், 220 விளையாட்டு திடல்கள், 204 குழந்தைகள் விளையாட்டு திடல்கள் இருக்கின்றன. இதில் 9 செயற்கை புல் கால்பந்து விளையாட்டு திடல்களை தனியாருக்கு வாடகைக்கு விட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு 120 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயம் செய்யும் வகையில் விரைவில் ஆன்லைன் டெண்டர் விடப்படும் என்று தெரிவித்தனர். ஆனால் கால்பந்து திடல்களை தனியாருக்கு தரக்கூடாது என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கால்பந்து செயற்கைப் புல் விளையாட்டு திடல்களை, தனியார் பராமரிப்புக்கு வழங்கி கட்டணம் நிர்ணயம் செய்ய நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மாநகராட்சி வாபஸ் பெற்றது.