உளுந்தூர்பேட்டையில் விசிக சார்பில் நடைபெற்ற மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாட்டுக்கு பங்களிப்பு செய்தவர்களுக்கு அக்கட்சித் தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஃபேஸ்புக் நேரலையில் இன்று அவர் பேசியது, உளுந்தூர்பேட்டையில் விசிக சார்பில் நேற்று நடைபெற்ற மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடு வெற்றிகரமாக நடந்தேறியுள்ளது. மாநாட்டை வெற்றி பெறச் செய்த விசிகவினருக்கும், அழைப்பை ஏற்று வருகை தந்து சிறப்புரையாற்றிய தோழமை கட்சித் தலைவர்களுக்கும் பங்களிப்பு செய்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
திமுக அரசுக்கு கோரிக்கை வைக்கும் மாநாட்டில் பங்கேற்ற திமுக பிரதிநிதிகளும், விசிக கோரிக்கைகளுக்கு முரணாக எதுவும் பேசவில்லை. இதுவே மாநாட்டுக்கு கிடைத்த வெற்றி. லட்சக்கணக்கான பெண்கள் மாநாட்டில் பங்கேற்றதை சொல்ல விரும்பாதவர்கள், கட் அவுட் மீது ஏறி நின்றனர், காவல் துறையினரை இடித்து தள்ளினர் என எதிர்மறை தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். இந்த விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டாம்.
விசிகவின் முன்னணி நிர்வாகிகள் உடன்படாதபோதும், மதுவிலக்கில் காந்தி, ராஜாஜி ஆகியோரின் பங்களிப்பை எடுத்துச் சொல்லும் வகையிலேயே அவர்களை அடையாளப்படுத்தி இருந்தோம். இதில் வேறெந்த நோக்கமும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.