சென்னை: ரூ.118 கோடிக்கு பொருட்கள் விற்பனை: ஆவின் நிறுவனம்
தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனை செய்யும் பணியில் ஆவின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. ஆவின் வாயிலாக, தினசரி 34 லட்சம் லிட்டர் மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இப்பால் பதப்படுத்தப்பட்டு பல வகைகளில் பிரித்து விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர, பால் உப பொருள்களான வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா உள்பட 225 வகையான பால் பொருள்கள் தமிழகம் முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாக தயாரிக்கப்பட்டு ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி, ஆவின் நெய், இனிப்பு வகைகள் உள்பட பால் பொருட்கள் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறிப்பாக, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20 சதவீதம் வரை கூடுதலாக விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, தீபாவளி பண்டிகை இனிப்பு வகைகளான நெய் பாதுஷா, நட்ஸ் அல்வா, காஜூ பிஸ்தா ரோல், காஜூ கட்லி, மோதி பாக் ஆகியவையும், ஆவின் மிக்சர், பட்டர் முருக்கு போன்ற காரவகைகளும், நெய் உள்பட பால் பொருட்களும் விறுவிறுப்பாக விற்பனையாகின. தீபாவளி பண்டிகையை ஒட்டி, நெய் மற்றும் இனிப்பு வகைகள் உள்பட ஆவின் பொருட்கள் விற்பனை வாயிலாக ஆவினுக்கு ரூ. 118.70 கோடி கிடைத்துள்ளது.