ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்தார். மேலும், நேர்மையின்றி செயல்படும் போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: காவல் ஆணையராக நான்பொறுப்பேற்ற பிறகு ரவுடிகள் ஒழிப்பில் கவனம் செலுத்தினேன். பலரவுடிகள் சென்னையை விட்டு ஓடிவிட்டனர். எனது நடவடிக்கைக்கு பலன் கிடைத்துள்ளதாக கருதுகிறேன்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளோம். இந்த வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்திலையும் விரைவில் கைது செய்வோம். இந்த வழக்கில் கைதாகி உள்ள நபர்களின் வங்கிக் கணக்குகள், சொத்துகளை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வழக்கு விசாரணை இறுதிகட்டத்துக்கு வந்துள்ளது. வழக்கு விவரங்கள் குறித்த விரிவான தகவல் அடுத்த வாரம் வெளியிடப்படும்.
கஞ்சா, தடை செய்யப்பட்டுள்ள குட்கா போன்ற புகையிலை போதைப் பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையில் தற்போது கவனம் செலுத்தி உள்ளேன். இதற்காக சென்னை உளவுப் பிரிவில் காவல் உதவி ஆணையர் தலைமையில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது